இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்- II மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா நவம்பர் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ. 380 கோடி மதிப்பிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தும், ரூ. 61, 843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் II-ஆம் கட்டம், கோயம்புத்தூர் - அவிநாசி சாலையில் ரூ. 1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம் , நஞ்சை புகலூரில் ரூ. 406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ. 309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ. 900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், திருமுல்லைவாயிலில் ரூ. 1,400 கோடி மதிப்பீட்டில் Lube Plant அமைத்தல், காமராஜர் துறைமுகத்தில் ரூ. 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.