சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணித்து சோதனையிட்டனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த இரு பயணிகள் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு பயணிகளையும் நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களுடைய சூட்கேஸ்க்குள் பாக்கெட் ஒன்று இருந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது பெரிய கண்ணாடி பாட்டில் ஒன்று இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அதனுள் சாம்பிராணி தூள்கள் இருந்தன.
சுங்கத்துறையினர் அந்த சாம்பிராணி தூள்களை ஆய்வு செய்தபோது, அதற்குள் தங்கக்கட்டிகள், தங்க செயின் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த தங்கக்கட்டிகள், செயின் மொத்த எடை 601 கிராம் எனவும் அதன் சர்வதேச மதிப்பு ரூ.26 லட்சம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு அவர்கள் உடைமைகளை மேலும் சோதனையிட்டபோது, அதனுள் மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து துபாயிலிருந்து சாம்பிராணி தூள்களில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.44 லட்சம் மதிப்புடைய தங்கம், மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து சிவகங்கை பயணிகள் இருவரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே நேற்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு ஆண் பயணியின் சூட்கேசுக்குள் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக சவுதி ரியால் வெளிநாட்டு பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்திய மதிப்பிற்கு ரூ.21.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து, அந்த பயணியை கைது செய்தனர். அதோடு அவருடைய துபாய் பயணத்தையும் ரத்து செய்தனர்.
சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து 2 துபாய் விமானங்களில் ரூ.65.5 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட சென்னை, சிவகங்கையை சேர்ந்த 3 பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை: நீதிமன்றத்தில் மனு தாக்கல்!