சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் திமுகவிற்கு மிகவும் முக்கியமானது.
இந்த நிதி உதவித்தொகை, பணக்காரர்களுக்கும், மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று விமர்சனங்களும், வழக்குகளும் எழுந்துள்ளன. எனவே இந்தத் திட்டத்துக்குத் தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறிய அளவுகோல் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்துவருகிறது" எனத் தெரிவித்தார்.
6 மாதம் கடந்துவிட்டது
திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகியும் இதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே தற்போதுள்ள நிதி பற்றாக்குறையில், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்படலாம் என்றும் அல்லது 1000 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் வரும் பொங்கல் நாளன்று இதுகுறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை வீடுகளில் வசிப்போர், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்!