சென்னை: ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி இன்று (ஜூன்.07) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் உளறி வருகிறார். அவருக்கு ஊடக ஒவ்வாமை, மைக் மேனியா நோய் இருக்கிறது. தற்போது அதிகம் பேச வாய்ப்பு கிடைக்காததால், கிடைக்கும் இடத்தில் அரசை விமர்சித்து வருகிறார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிற முன்னாள் அமைச்சர்கள் முதலமைச்சரை பாராட்டும் வேளையில், இவர் மட்டும் குறை கூறி வருகிறார். இதற்கு நான் மேற்கூறிய நோயின் தாக்கம் தான் காரணம்.
திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல திட்டங்கள் ராயபுரம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக மீன் சந்தை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, கழிவுநீர் வடிகால் சீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கான பிரத்யேகப் பகுதி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.