சென்னை: தயாரிப்பாளர், நடிகரான ஆர்.கே சுரேஷ் மீது 1.6 கோடி பண மோசடிப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக முறையாக பதிலளிக்காமல் விசாரணை நடைபெறுகிறது எனக்கூறி ஆர்.கே சுரேஷ் மழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்பவர் கடந்த வாரத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே சுரேஷ் மீது பண மோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ஆர்.கே சுரேஷ் தனது கணவர் ராமமூர்த்தியிடம் 10 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாகக் கூறி 1 கோடி ரூபாய் வாங்கியும், அவரது இடத்தை தனது பெயருக்கு மாற்றி அந்த பத்திரத்தை வங்கியில் வைத்து 4.5 கோடி ரூபாய் கடன் பெற்றும் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி ஆர்.கே சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று (ஜூலை 2) ஆர்.கே சுரேஷை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். அதனடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் ஆர்.கே சுரேஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். மேலும், பொய் புகார் அளித்ததாக வீணா மற்றும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் ஆர்.கே சுரேஷ் பதில் புகாரளித்தார்.
லோன் மோசடி வழக்கு: பதில் புகாரளித்த ஆர்.கே. சுரேஷ் அந்த புகாரில், எனது பெயரை கெடுப்பதற்காகவே பொய் புகார் ஒன்றை வீணா கொடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு விருகம்பாக்கம் வேலன் நகரில் உள்ள எனது வீட்டை விற்க முடிவு செய்திருந்த போது, கமலகண்ணன் என்பவர் விழுப்புரத்தை சேர்ந்த வீணா வீட்டை வாங்க ஆசையாக இருப்பதாக என்னிடம் கூறினார். இதனால் வீணாவிடம் 6 கோடியே 75 லட்சத்திற்கு வீட்டை விலை பேசினேன். இதனை ஒப்புக்கொண்ட வீணா, பின்னர் தொழில் நஷ்டம் காரணமாக பணம் குறைவாக உள்ளதாக கூறி சொத்துப்பத்திரங்கள்,கையெழுத்திட்ட காசோலைகளை கொடுத்து வீட்டை எழுதிக் கேட்டார்.இதனை நம்பி எனது வீட்டை வீணாவிற்கு எழுதிக் கொடுத்தேன்.இதனையடுத்து என்னிடம் இருந்து எழுதி வாங்கிய வீட்டின் பத்திரத்தை வங்கியில் வைத்து 4.5 கோடி கடன் வாங்கி, அந்த பணத்தை எனது வங்கி கணக்கில் வீணா செலுத்தினார். இதனையடுத்து மேலும் 93 லட்ச ரூபாய் என மொத்தம் 5.40 கோடி ரூபாய் வரை எனக்கு வீணா வழங்கினார்.ஆனால் பத்திரப்பதிவு, ஸ்டாம்புக்கான பணம் 1.77கோடி ரூபாயை நான் செலுத்தினேன். அந்த பணத்தை ஒரு வாரத்தில் தருவதாக வீணா தெரிவித்தார். ஆனால், நீண்ட நாட்களாக வீணா பணம் கொடுக்காததால் முன்னர் எனக்கு கொடுத்த கையெழுத்திட்ட காசோலைகள் மூலம் பணத்தை எடுத்துக் கொள்வதாக வீணாவிடம் தெரிவித்தேன். இதனால் கோபமடைந்த வீணா, மதுரவாயலை சேர்ந்த கராத்தே கார்த்திக் என்பவரிடம் கூறி அவர் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 1கோடி ரூபாயை வீணாவிடம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனையடுத்துதான் பொய்யான புகார் ஒன்றை எனக்கு எதிராக தயார் செய்து வீணா புகாரளித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.புகார் அளித்துவிட்டு திரும்பிய ஆர்.கே சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய ஆர்.கே சுரேஷ், புகார் குறித்து பேட்டியில் தெரிவிக்காமல் மழுப்பியபடியே பேச தொடங்கினார்.கடந்த 12 ஆண்டுகளாக நான் சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். நான் எவ்வளவு நேர்மையானவன் என அனைவருக்கும் தெரியும். லோன் வாங்கி தருவதாக பண மோசடி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒரு சிலரின் தூண்டுதலின் பேரிலேயே என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.எனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்த நிலையில், கமலக்கண்ணன் என்ற புரோக்கர் மூலம் வீணா அறிமுகமானார். வீட்டு பத்திரப் பதிவின்போது 93 லட்ச ரூபாயை வீணா மூன்றாம் நபர் ஒருவரிடம் பெற்று எனது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன் பின்னர் அவர்களின் மோசடி தெரியவர, நான் அந்த தொகையை சம்பந்தப்பட்டவரிடம் திருப்பி செலுத்தியதற்கான ஆவணங்கள் புகாருடன் இணைக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன். லோன் தேவைப்பட்டால் எனது வீட்டை நானே வங்கியில் வைத்து கடன் வாங்கிக் கொள்ள முடியும், எதற்காக வேறு ஒரு நபர் மீது வீட்டை மாற்றி கடன் வாங்க வேண்டும் என்றார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர், ஆர்.கே சுரேஷிடம் தற்போது வீடு யார் பெயரில் உள்ளது? வீடு பெயர்மாற்றம் செய்யபட்டது உண்மை என்றால் நீங்கள் இன்னும் வீட்டை காலி செய்யாமல் அங்கேயே இருப்பதன் காரணம் என்ன? வீணா மீது என்ன புகாரை முன்வைத்துள்ளீர்கள்? என்ற பல கேள்விகளை முன்வைத்தனர். செய்தியாளர் அடுக்கடுக்காக கேட்ட அனைத்து கேள்விக்கும் பதிலளிக்காமல், விசாரணை நடைபெற்று வருகிறது; இதுபற்றி மீண்டும் ஒருநாள் அனைவரையும் அழைத்து விவரிக்கிறேன் என மழுப்பலாக பதிலளித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.இந்த இரு புகார்கள் மீதான விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர். மோசடி செய்தது யார்?வீட்டை ஏமாற்றியது யார்? என்ற பல்வேறு கோணங்களில் இருவரையும் தொடர்ந்து நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி அனுமதி