திண்டுக்கல்: தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் முடிதிருத்தம் செய்யும் தொழிலாளியின் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் அரசு தரப்பில் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய வில்லை எனக்கூறிய கீழமை நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை ஆகியிருக்கிறார்.
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது. அந்த சிறுமிக்காக மேல்முறையீடு செய்க, என தெரிவிக்கப்பட்டுள்ளது.