மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான போரூர் ராமாவரம் தோட்டத்தில் உள்ள சொத்துக்களை, அவரது வளர்ப்பு மகள்களான கீதா, நிர்மலா, ஜானகி, ராதா, சுதா ஆகியோருக்கு 1987இல் உயில் எழுதி வைத்திருந்தார்.
அவரது மறைவிற்கு பிறகு ராமாவரம் தோட்டத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான பள்ளி, பங்களா, தோட்டம், கோவில், கார் நிறுத்தம், நீச்சல் குளம், சிறு திரையரங்கு ஆகியவற்றை வாய்மொழி பாகப்பிரிவினை செய்து, அவர்கள் ஒவ்வொரு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வாலிபால் மைதானம், உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு மைதானங்களை சுதாவும், அவரது மகன் ராமச்சந்திரனும் கட்டிவருவதால், அதன் மீது நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாநகராட்சியில் கீதா புகார் அளித்திருந்தார்.
அந்த மனு மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், கட்டுமானங்களுக்கு தடை கோரியும் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர்.எழுதிய உயிலின்படி, அங்குள்ள சொத்துக்களை வகை மாற்றம் செய்யக்கூடாது என்பதை மீறி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகவும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், வளசரவாக்கம் மண்டல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.