சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் உள்ளிட்ட மூன்று பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். அதில், "சென்னை-பெங்களூரு இடையே காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகப் புதிதாக விரைவுச் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. குவாரி உரிமையாளர்கள் அளித்த மனுவை பரிசீலித்து விரைவுச் சாலைத் திட்ட இயக்குநர் திருப்பெரும்புதூர் வட்டம் மாம்பாக்கம், வடமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வேளாண் நிலம் வழியாகப் புதிய சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள், அளவைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் உள்ள நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை 12 கோடி ரூபாய் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய வழித்தடம் அமைப்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிகளுக்கு முரணானது.
இதன் மூலமாக சுமார் 200 விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, இது விதிகளுக்கு எதிரானது. எனவே மாம்பாக்கம், வடமங்கலம் கிராமங்களில் விரைவுச் சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி, நில அளவைப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைத் திட்ட இயக்குநர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: மருத்துவருக்கு எமனான குரங்கு: சீனாவில் உருவெடுக்கும் புதிய வைரஸ்