இதுதொடர்பாக சமூகவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வாய் நலம் ஒரு தனி நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது. தமிழ்நாட்டில் `வாய்வழி நோய் சுமை’ என்பது ஒரு முக்கிய பிரச்னையாகும்.
வாய்வழி சுகாதார கணக்கெடுப்புப்படி , தமிழ்நாட்டின் பல் சொத்தை - பாதிப்பு உள்ளோர் 61.4 விழுக்காடாகும். பல் ஈறு அழற்சி நோய் பரவல் 46 விழுக்காடாகும். ஒழுங்கற்ற முறையில் அமைந்த பற்கள் உடையோர் 30 விழுக்காடாகும வாய்வழி புற்றுநோயின் பரவல் – அனைத்து புற்றுநோய்களிலும் 40 விழுக்காடாகும்.
இதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கு பல் மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள 78 விழுக்காடு ஆரம்ப சுகாதார மையங்களில் வாய்வழி சுகாதார சேவைகள் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் ஆயிரத்து 421 ஆரம்ப சுகாதார மையங்களில் 385 மட்டுமே பல் மருத்துவர்களைக் கொண்டுள்ளன. இது வருத்தத்தை அளிக்கிறது.
பல் மருத்துவத்திற்கென்று, தமிழ்நாட்டில், ஒரே ஒரு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டை விட சிறிய மாநிலமான கேரளாவில் நான்கு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பல் மருத்துவ கல்லூரி நிறுவப்படும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் . ஜெயலலிதா 2015 ஆம் ஆண்டில் அறிவித்தார். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 2017-18 ஆம் ஆண்டில் , ரூ 50 கோடியை ஒதுக்கீடு செய்து, அக்கல்லூரிக்கான கட்டட கட்டுமானத்தைத் தொடங்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.
மருத்துவப் பணியாளர்கள் பணிநியமன வாரியம் (எம்ஆர்பி) மூலம் பல் மருத்துவர்களை பணிநியமனம் செய்திட வேண்டும். பல் மருத்துவர்கள் பணி நியமனத்திற்கான தேர்வு 2014 ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
எனவே உடனடியாக ,காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களை உருவாக்கி, பல் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். தனியார் பல் மருத்துவ கிளீனிக்குகள், மற்றும் பல் மருத்துவமனைகளில் பணி புரியும் பல் மருத்துவர்களுக்கு, அரசு பல் மருத்துவருக்கு இணையான ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்”. என அதில் கூறியுள்ளார்.