சென்னை: Request to set up Medical University: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2011ஆம் ஆண்டில், சித்தா, பிற இந்திய மருத்துவ முறைகள், ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கென்று தனியாக பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அது மட்டுமின்றி, மேற்கூறிய மருத்துவ முறைகளுக்கான வரலாற்றுப் பின்னணி, தனிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட வேண்டியதற்கான காரணம், இவற்றில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள், பல்கலைக்கழகத்தின் பெயர் ஆகியவை குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தகவல்களை அளித்திருந்தார்.
அரசாணை வெளியீடு
அதன்படி அன்றைய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ் 14.1.2011 அன்று வெளியிட்ட அரசாணையில், 'இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை ஆணையர் கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலித்து சித்தா, பிற இந்திய மருத்துவ முறைகள், ஹோமியோபதித்துறை மருத்துவமுறைகளுக்கென ’இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகம்’ ஏற்படுத்த கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் கிடந்த பணி
அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் "இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகம்" ஏற்படுத்தும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில், சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவப் படிப்புகள் உள்ளன.
மொத்த மருத்துவக் கல்லூரிகள்
மேலும், சித்தா மருத்துவக் கல்லூரிகள் 11, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் 19 , ஹோமியோபதி கல்லூரிகள் 11, ஆயுர்வேதா கல்லூரிகள் 9, ஒரு யுனானி மருத்துவக் கல்லுாரி உள்ளன.
தமிழ்நாட்டில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப்பல்கலைக்கழகத்தின்கீழ் அனைத்து மருத்துவப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், சித்த மருத்துவத்தை மட்டும் தனியாகப் பிரித்து, தனிப் பல்கலைக்கழகம் அமைப்பது சரியாக இருக்காது. மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இருந்த இத்துறைகள், 2014இல் தனி ஆயுஷ் அமைச்சகமாக அறிவிக்கப்பட்டன.
கர்நாடகா மாநிலத்தில் ஒருங்கிணைந்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி என்ற ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள சித்தா மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றி அனைத்து இந்திய மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து "இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகம்" என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வைத்த பெயரை சூட்ட வேண்டும் என ஆயுஷ் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது - ஆளுநர் மாளிகை தகவல்