சென்னை: ஓமந்தூரர் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் உள்ள ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். அதனைத் தாெடர்ந்து பயிற்சியின் போது காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற விளையாட்டு வீராங்கனை, மரியம்மா மற்றும் பாலாஜி, 2 ஆம் வகுப்பு மாணவி சிந்து ஆகியோரின் உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மான்டாவியாவிடம் கோரிக்கை மனுவை வழங்கி பேசும்போது, வரும் 1 ஆம் தேதி நொச்சிக்குப்பத்தில் காசநோய் இருப்பவர்களை கண்டறிவதற்கான எக்ஸ்ரே வசதியுடன் கூடிய 23 வாகனங்களை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார். அதற்காக தன்னார்வலர்கள் 100 பேர் தேர்வுச் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிற இன்னுயிர் காப்போம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியா முழுமைக்கும் சென்று அடைய உள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் தமிழ்நாடு அரசு கேட்கும் உதவிகளை அமைச்சர் செய்து தருகிறார். அவருக்கு நான் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
கரோனா காலத்தில் கேட்கும் போதெல்லாம் மறுப்பு ஏதும் சொல்லாமல் வழங்கி வருகிறார். இதனால் 94.50 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 54.92 இரண்டாம் தவணை தடுப்பூசி போடபட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக போட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை அமைச்சரிடத்தில் எடுத்து சொன்னேன்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும். மேலும், 2022 பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரை எய்ம்ஸ் நிலையத்தின் 50 மாணவர்கள் சேர்க்கைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக இடம் கொடுத்து தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கோயம்புத்தூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க வேண்டும்.
மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்கு முறை விதிமுறைகள், முதுநிலை மருத்துவக் கல்வியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதில் மாநிலங்களின் பங்கினை குறைக்கும் விதிகள் நீக்கப்பட வேண்டும் என்று 31.7.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும், வரைவு விதிமுறைகளில் பிரிவு 10.1 மற்றும் அதன் கீழ் உள்ள துணைப் பிரிவுகள் மருத்துவக் கழகத்தில் பதிவு செய்ய தகுதி தேர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வாக மாற்றுவது என்பதை ஒன்றிய அரசு கைவிடவேண்டும்.
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தற்போதைய கலந்தாய்வு முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரையை நசுக்குவதாகும். பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ வேண்டும்.
உக்ரைனில் படித்த மாணவர்கள் மீண்டும் அவர்கள் படித்த பாடத்திட்டத்தை கொண்டுள்ள அருகில் உள்ள நாடுகளுக்கு சென்று படிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த மாணவர்களின் எண்ணிக்கையை 7.50 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்த வேண்டும் 50 துணை சுகாதார நிலையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு