பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக, கடந்த அதிமுக ஆட்சியில் பணியாற்றியவர் உதயச்சந்திரன். பின்னர் புதிய பாடத்திட்ட குழுவிற்குத் தலைமை ஏற்று, புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டார். பணிகள் முடிவதற்கு முன்னரே, அவர் தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், திமுக ஆட்சி பதவி ஏற்ற பிறகு முதலமைச்சரின் செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அவரிடம் பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி, மீண்டும் பள்ளிக் கல்வித்துறையில் சீரமைப்புப் பணிகளை தொடங்கினார்.
அதன் முதல் கட்டமாக திமுக ஆட்சி பதவியேற்றபின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவியை ரத்து செய்து, பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த நந்தகுமார், பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
அதிமுக ஆட்சியில் ஆணையர் பதவி அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால், தற்போது இயக்குநர் பதவியை ரத்து செய்து, அந்த இடத்தில் ஆணையர் நியமனம் செய்யப்பட்டிருப்பது பள்ளிக் கல்வித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
திமுக ஆதரவு சங்கமான தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம், ஜாக்டோ ஜியோ அமைப்பு உள்பட10க்கும் அதிகமான சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதேபோல் அரசியல் கட்சியின் தலைவர்களும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவ்விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றிருப்பதால், அவர் நடவடிக்கை எடுக்கலாம் என ஆசிரியர் சங்கத் தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் காரணமாக, அடுத்தகட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநரான கண்ணப்பன் உட்பட அனைத்து இயக்குநர்களையும், மண்டல அளவிலான பொறுப்புகளுக்கு நியமனம் செய்து, மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கும், முதலமைச்சரின் செயலாளர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.