சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் ஏ. செல்வம்மாள் மீது திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் குற்றவழக்குப் பதியப்பட்டது. அதனடிப்படையில், அவருக்குச் சொந்தமான ஸ்ரீபுவனேஸ்வரி மருத்துவமனைக்கு மாவட்ட மருத்துவப் பணிகள், துணை இயக்குநரால் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செல்வம்மாள் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மருத்துவத்துறை உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததன் அடிப்படையில் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர் தரப்பில் மருத்துவருக்கு எதிரான குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், அவர் தொடர்புடைய அசையும் சொத்துக்களை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் அதை மீறும் வகையில் மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் செயல்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது துணை இயக்குநர் தரப்பில் மருத்துவர் செல்வம்மாள் மீதான குற்றவழக்கில் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், சட்டவிரோத கருக்கலைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இடம் என்பதால் மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி அப்துல் குத்தூஸ், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முரணாக மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, துணை இயக்குநர் பிறப்பித்த அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க...'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு