சென்னை: இந்து மத கடவுள்களையும், கோயில்களையும் விமர்சித்துப் பேசியதாகக் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் மீது, தமிழ்நாடு முழுவதும் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, மோகன் சி.லாசரஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, ஆவடியில் 2016ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு மனுதாரர் பதிலளித்தாரே தவிர, இந்து மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தும் கூறவில்லை எனவும், 2016இல் நடந்த நிகழ்வு தொடர்பான காணொலியை, 2018ஆம் ஆண்டு வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் மோகன் சி. லாசரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
பின்னர், இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் பேசப்போவதில்லை எனவும் உத்தரவாதம் அளித்து, அவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகப் புகார்தாரர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவில், மனிதனை நல்வழிப்படுத்தும் மதம், நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், தங்கள் மதம் பெரியது எனக் கூறி, மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது, வெறுப்பை உமிழ்வது என்பது, மதத்தின் நோக்கமோ, மத நம்பிக்கைகளின் நோக்கமோ அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதபோதகர்கள் மிகுந்த பொறுப்புடன் பேச வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இல்லாவிட்டால் அது நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமான மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆபத்தாகிவிடும் எனவும், மேலை நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமம் என்பதையே நமது மதச்சார்பின்மை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிற மதங்களை இழிவுபடுத்தக் கூடாது என ஏசுநாதர் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டியது அனைத்து குடிமக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.