சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
முன்னதாக சேலம் வழக்கறிஞர்கள் சார்பில் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை கரோனா நிவாரண நிதியாக அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், "தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க பிரதமரை வலியுறுத்தியதற்காக நன்றி தெரிவித்தோம்.
வழக்கறிஞர்களுக்கான நல நிதியை ஏழு லட்சத்திலிருந்து உயர்த்தித் தர வேண்டும்,
கரோனா தொற்றால் மறைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும், வழக்கறிஞர்களுக்கு வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தோம்.
முதலமைச்சர் ஒவ்வொன்றையும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல் சட்ட அமைச்சரையும் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சட்டத் துறை அமைச்சரும் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றார்.