சென்னை: தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத்துறை, காவல் துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்கு தகுதியான வாகனங்கள் என சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், இந்தாண்டு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் பொருட்டு தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்கள் வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் மொத்தமுள்ள 425 பள்ளி வாகனங்களில் முதற்கட்டமாக 225 வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தபட்டன. முக்கியமாக 2012 போக்குவரத்து விதியின்படி இருக்கைகள், முகப்பு விளக்குகள், அவசரக் கதவுகள் இயங்குகிறதா, தீயணைப்புக் கருவிகள் உள்ளதா போன்ற 17 பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்த பின்னர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆய்வின்போது குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு, குறைபாடுகள் சீர் செய்த பின்னர் ஒரு வார காலத்தில் மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், ”பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு ஒரு வார காலத்தில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குறைபாடுகள் சீர் செய்யாமல் வாகனங்களை இயக்கினால் வாகன உரிமம் ரத்து செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'சுற்றுச்சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டுபிடியுங்கள்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி