இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் இளங்கலை படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால், ஏறத்தாழ 313 மாணவர்கள் மருத்துவப்படிப்பிலும், 92 மாணவர்கள் பல் மருத்துவத்திலும் சேருவதற்கான வாய்ப்பினை பெற உள்ளனர். தற்போது அதற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கப்பெற்றும் கட்டணத்தின் காரணமாக மாணவர்கள் யாரும் சேரமுடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, உதவித்தொகை வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக அரசே மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணம் போன்றவற்றை செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று, 7.5% இடஒதுக்கீட்டை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொண்டு, கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் சார்பில் முறையிடப்பட்டது.
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இடையில் தலையிட்டு கலந்தாய்வை நிறுத்த முடியாது எனவும் மறுப்பு தெரிவித்தனர். உரிய நடைமுறைகளை பின்பற்றி மனு பட்டியலிடப்படும் போது விசாரிப்பதாகவும் மனுதாரரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு