சென்னை: குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவள்ளி சமேத அகத்தியர் கோயிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு 11 நபர்கள் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
அதனை சட்டப்படி தற்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழ்நாடு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு உண்டான சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றோடு சேர்த்து சுமார் 79 ஏக்கர்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை கைப்பற்றியிருக்கிறது.
அந்த வகையில் அருள்மிகு ஆனந்தவள்ளி சமந்த அகத்தியர் திருக்கோயிலுக்கு சொந்தமான நெமிலிச்சேரியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுள்ளது.
மேலும் அடுத்தடுத்த இதுபோன்ற பணிகள் தொடரும். திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.