சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இளநிலை, முதுநிலை ஆகிய மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மாநில அரசுகள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2007ஆம் ஆண்டு முதல் கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக்கல்வி இடங்களில், முன்னேறிய வகுப்பினரே அதிகளவில் சேர்ந்துள்ளனர். இந்த தருணத்தில், முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு, மிக அதிகமாக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு, அவசர அவசரமாக வழங்கப்படுகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்டோர் மிக மோசமான பாதிப்புக்கும், இழப்புக்கும் உள்ளாகின்றனர்.
எனவே, அகில இந்தியத் தொகுப்பில் இளநிலை, முதுநிலை மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இந்த ஒதுக்கீட்டை 52 விழுக்காடாக, உயர்த்த வேண்டும். கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை ரத்து செய்ய வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்டோரைப் பாதிக்கும் மிக முக்கியப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே, மாநில அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த, உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” எனக் கூறினார்.