மதுரை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்ததைப் போன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ரவிச்சந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் மூலம் மனு அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, மதுரை மத்தியசிறையிலிருந்து வந்தார், ரவிச்சந்திரன். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் வசிக்கும் இவரது தாயார் ராஜேஸ்வரியை உடனிருந்து கவனித்துக்கொள்ள, தமிழ்நாடு அரசு ரவிச்சந்திரனுக்கு ஏற்கெனவே, 7 முறை பரோல் நீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் அண்மையில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தது.
இந்நிலையில் தான் உட்படச் சிறையிலிருந்து வரும் 6 பேரையும் விடுதலை செய்யக் கோரி, இன்று (மே 25) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தைப் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை முன்மாதிரியாக கொண்டும், வேண்டுமென்றே காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்காமல் தமிழ்நாடு முதலமைச்சரே, தான் உட்படச் சிறையிலிருந்து வரும் ஆறு பேரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' எனவும் அந்தக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை அநீதி - குண்டு வெடிப்பில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி அனுசுயா கொந்தளிப்பு!