பெரியார் பற்றிய கருத்து... ரஜினி மீது எடுத்த நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு - தந்தை பெரியார்
சென்னை: பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், அவர் மீது திராவிடர் விடுதலைக் கழகம் அளித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜனவரி 18 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்புகாருக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், திவிகவின் சென்னை மாவட்டத் தலைவர் உமாபதி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகம் அளித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'திமுகவின் கொ.ப.செ. நயன்தாரா... கி. வீரமணி இருக்கும்வரை திமுக உருப்படாது!' - ராதாரவி தாக்கு