நாடு முழுவதும் இன்று நடைபெறும் அனைத்துத் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொடர்வண்டித் துறை தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில், தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பாக, பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர் சட்டத்தில் அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள், தொடர்வண்டித் துறையை தனியார் மயமாக்கும் முடிவு ஆகியவற்றை எதிர்த்து அவர்கள் பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா பேசும்போது, "தற்போதுள்ள அரசு, பல தொடர்வண்டிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் - மதுரை, சென்னை - ஹைதராபாத், சென்னை - கோயம்புத்தூர், தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - திருச்சி, தாம்பரம் - கன்னியாகுமரி, சென்னை - திருச்செந்தூர் ஆகிய தடங்கள் வழியாகச் செல்லும் தொடர்வண்டிகளை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளனர்.
35 ஆண்டுகளுக்கு இந்த வண்டிகளைக் குத்தகைக்கு கொடுக்கிறார்கள். 13,500 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். இதனால் தொடர்வண்டிக் கட்டணங்கள் அதிகரித்து, சாதாரண மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பாரத் பந்த்' எதிரொலி: கேரளாவில் முழு அடைப்பு; வெறிச்சோடிய குமுளி