புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை உத்தரவை நேற்று (ஏப்ரல் 4) இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை அமல்படுத்தப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மார்ச் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவு தேர்தல் ஆணைய அனுமதியுடன் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்த 144 தடை உத்தரவை ரத்துசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மாலை விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் எம்.என். சுமதி, எவ்வித முறையான காரணங்களோ, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இருப்பதாகவோ, அவசரநிலை இருப்பதாகவோ எந்தக் காரணங்களையும் குறிப்பிடாமல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவின் ட்விட்டர் பதிவிகளை, மாவட்ட ஆட்சியர் பலமுறை ரீ-ட்வீட் செய்துள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடியவராக இருப்பதால் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பித்திருப்பதாகவும் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
அப்போது புதுச்சேரி அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் மாலா, தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நாங்கள் அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோமா எனக் கேள்வி எழுப்பினார்கள். மேலும் விஷயத்தின் தன்மையை ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினர்.
தேர்தல் ஆணையம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ஒவ்வொரு தேர்தலின்போதும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்தான் என்று தெரிவித்தார்.
ஆனால் புதுச்சேரி அரசின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'நீங்கள் தேர்தல் ஆணையம்தானே தவிர, அரசியல் கட்சி கிடையாது' என்றும், அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.
144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்று உரிய தெளிவுபடுத்துதலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிடாவிட்டால், நீதிமன்றமே அதை ரத்துசெய்யும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
அப்போது புதுச்சேரி அரசுத் தரப்பில் 144 தடை உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை வெளியிடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.