சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 13ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தலைமைச் செயலாளரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், தயாநிதி மாறனின் பேச்சு, தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பேசியுள்ளதாகவும் புரட்சி பாரதம் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தயாநிதி மாறன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புரட்சி பாரதம் அமைப்பினர் புகாரளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாகப் பேசினார். தற்போது, தயாநிதி மாறன் பேசி வருகிறார். எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை பொது இடத்தில் இழிவாகப் பேசி வரும் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்“ என்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் 'அரசியல் வாய்ஸ்' சண்முகம் - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு