புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்குள்ள கரோனா வார்டில் பணியாற்றிய சில செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதனால், வார்டுகளில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்கமாக நான்கு ஷிப்டுகளில் அங்கு செவிலியர்கள் பணியாற்றிய நிலையில், நேற்று (செப்டம்பர் 1) மூன்று ஷிப்டுகளாக குறைப்பது என நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. பணி நேரம் அதிகரித்ததை கண்டித்து செவிலியர்கள் நேற்று மாலை மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஜிப்மர் நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று ஷிப்ட் முறை ரத்து செய்யப்படுவதாக நிர்வாக அலுவலர்கள் உறுதி அளித்ததால் பணிக்கு திரும்பினர். இதனிடையே நேற்று அங்குள்ள கரோனா நோயாளிகளில் வார்டில் பணியிலிருந்த ஜிப்மர் ஊழியரை நோயாளியின் உறவினர் தாக்கியதில் பாதிக்கப்பட்டார்
இதையடுத்து, தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவர்கள், ஊழியர்கள் அங்கு ஒன்று திரண்டு ஒரு மணி நேரம் கூட்டம் நடத்தினர். மேலும், 24 மணி நேரத்தில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை முதல் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்து பணிக்கு திரும்பினர்.