சென்னை: தமிழ்நாட்டில் தற்காெலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டாலும், தற்கொலை இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 22 நபர்கள் என இருந்துவருகிறது.
இது குறித்து, சிநேகா அறக்கட்டளையின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் கூறும்போது, “தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
எலி மருந்து, சாணிப் பவுடருக்குத் தடை
2019ஆம் ஆண்டில் 16 ஆயிரத்து 883 பேர் தற்கொலைச் செய்துகொண்டுள்ளனர். 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2020ஆம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஒரு லட்சம் நபர்களில் 22.2 விழுக்காட்டினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சென்னையில் இரண்டாயிரத்து 30 பேர் இறந்துள்ளனர். இறப்பு விழுக்காடு 27 ஆக உள்ளது. மேலும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 விழுக்காட்டினர் பூச்சி மருந்து, எலி மருந்து, சாணிப் பவுடர் போன்றவற்றை உட்கொண்டுதான் இறக்கின்றனர். எனவே எலி மருந்து, சாணிப் பவுடர் ஆகியவற்றை அரசு தடைசெய்ய வேண்டும்.
துணைத் தேர்வுகளால் குறைந்த தற்கொலைகள்
சமீப காலமாக, இளைஞர்கள்தான் அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். நீட் தேர்வு வந்த பின்னர் அதன் பாதிப்பாலும் மாணவர்கள் தற்கொலை அதிகரித்துள்ளது.
முன்னர், பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் அதிகளவில் தற்கொலை செய்துகொண்டிருந்தனர். அதனைத் தவிர்ப்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுக்குப் பின்னர் துணைத் தேர்வு கொண்டுவரப்பட்டது.
இதனால், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வது குறைந்துள்ளது. முன்னர், தேர்வு தோல்வியால் தற்கொலை 400, 500 ஆக இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு 80 ஆக குறைந்துள்ளது.
பெற்றோர்களின் பங்கு
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வி ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுடன் இணைந்து தற்கொலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் பூர்ண சந்திரிகா, “தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிரித்துவருகிறது. இதற்கு சாணிப் பவுடர், எலி மருந்து போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
தற்கொலை தடுப்பு நாளின்போது, சாணிப்பவுடர் தடைசெய்யவும், எலி மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தற்கொலையைத் தடுக்கும்வகையில் நடப்பாண்டில் 104 என்ற இலவச அழைப்பு எண் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளிடம் மருத்துவம் மட்டும் இல்லாமல் பிற துறைசார்ந்த படிப்புகளும் இருக்கின்றன என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
பெண் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டு, இறப்பதைத் தடுக்கும்வகையில் அவர்களை வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது துணிவாக நடப்பதற்கு நாம் கற்றுத் தர வேண்டும். மேலும், தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் மன ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது” எனக் கூறினார்.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, “தற்கொலை செய்துகொள்பவர்கள் சாணிப் பவுடர் அதிகம் சாப்பிட்டு இறக்கின்றனர். முன்பு வீட்டின் முன்பு சாணிப் பவுடர் தெளிப்பது கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்பொழுது வீட்டில் சாணிப் பவுடர் வைத்திருப்பதால், அதனை எடுத்துச் சாப்பிட்டு இறக்கின்றனர்.
எனவே, தொழில் துறையுடன் இணைந்து சாணிப் பவுடர் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதேபோல், எலி மருந்து சாப்பிட்டும் பலர் இறக்கின்றனர். அதனால், தனியாக வருபவர்களுக்கு எலி மருந்து கொடுக்கக் கூடாது எனவும், அதனை வெளியில் தெரியும்படி விற்பனை செய்யக் கூடாது எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனைப் பாதுகாப்பாக விற்பனை செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்றார்.