சென்னை: தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்த குமார் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "கரோனா தொற்று பரவி வரும் காலத்திலும், தமிழ்நாட்டில் தரமான கல்விக்கு தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கடந்த 15 மாதங்களாக பள்ளிகள் திறக்காமல், பாடம் நடத்தாமல் உள்ளனர்.
கல்விக் கட்டணம் வசூலிக்க முடியாமல் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 75 விழுக்காடு கல்வி கட்டணத்தை 75 விழுக்காடு பெற்றோர்கள் செலுத்தாமல் உள்ளனர். நர்சரி, பிரைமரி பள்ளிகளில் ஒரு விழுக்காடு கட்டணம் கூட தமிழ்நாட்டில் எங்கும் வசூல் ஆகவில்லை.
இதர பள்ளிகள் வெறும் 25 விழுக்காடு கல்வி கட்டணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, கடந்த 15 மாதங்களாக சொல்லிமாளா துயருக்கு ஆளாகி உள்ளனர். தனியார் பள்ளி ஆசிரியர்களையும், நிர்வாகத்தையும் பாதுகாத்திட அவர்களுக்கு வாழ்வாதார நிதி வழங்குங்கள் எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் நாள்தோறும் தினசரி கூலி வேலைகளுக்கும், இன்ன பிற வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். பிற மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகியன வழங்குவது போல் வாழ்வாதார நீதியை தனியார் பள்ளி ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் ஆகியோருக்கும் வழங்க வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் சுயநிதி அடிப்படையில் செயல்பட்டு வரும் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 8.50 லட்சம் மாணவர்களை சேர்த்து கல்வி கற்பித்த வகையில், 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் தர வேண்டிய ரூபாய் 500 கோடியை தனியார் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டி உடனடியாக வழங்கி உதவிட வேண்டும்.
மேலும், அரசு பள்ளிகள், அரசு நிதி பெறும் பள்ளிகளில் மட்டும் ஜூன் 14ஆம் தேதி திறப்பதற்கும், புதிய மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் தனியார் சுயநிதி பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக, அரசு ஒரு அறிவிப்பு கூட விடாதது வருத்தமாக உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட தனியார் பள்ளிகளுக்கு உத்தரவை பிறப்பிக்காமல், அரசு பள்ளிகள் மட்டும் திறக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்திருப்பது, ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பது போல் உள்ளது.
எனவே பாரபட்சமில்லாமல் அனைத்து வகை பள்ளிகளையும் திறப்பதற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இல்லையென்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்" என அதில் கூறியுள்ளார்.