பால் கொள்முதல் விலை உயர்வு, பால் தட்டுப்பாடு காரணமாக பால், பால் பொருள்களின் விலையை உயர்த்தவுள்ளதாக ஆரோக்கியா, திருமலா, ஹெரிடேஜ், தூத்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவற்றில் சில நிறுவனங்கள் இன்று முதலே விலையை உயர்த்தியுள்ள நிலையில், நாளை முதல் அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்துகின்றன. அதிகபட்சமாக நான்கு ரூபாய் வரை பாலின் விலை உயர்த்தப்படுகிறது.
தனியார் நிறுவன பாலின் விலை கடந்தாண்டு 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதன் விலை உயர்த்தப்படுகிறது. குழுந்தைகளின் அத்தியாவசிய உணவான பாலின் விலை உயர்த்தப்படுவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, "தமிழ்நாடு அரசு தனியார் பால் விலை உயர்வு விவகாரத்தில் தலையிட வேண்டும். கடந்தாண்டு பாலின் விலை 8 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வறட்சியில்லாத காலத்திலேயே பால் தட்டுப்பாடு என்று கூறி விலையை உயர்த்தும் நிறுவனங்கள் வறட்சி ஏற்படும் காலங்களில் மேலும் விலையை உயர்த்தக்கூடும். இதனால் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல், விற்பனை விலையை தமிழ்நாடு அரசே நிர்ணயம்செய்ய வேண்டும். 84 விழுக்காடு மக்கள், தனியார் பாலையே வாங்கி பயன்படுத்துவதால் அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களின் ஒரு லிட்டர் சாதாரண பால் 56 ரூபாயாக உள்ள நிலையில், அதே பால் ஆவினில் 46 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்