சென்னை: கோயம்பேட்டில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர், அக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பேராசிரியரை உடனடியாக கைது செய்யக்கோரி கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் உடனடியாக அந்தப் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சி.எம்.பி.டி காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இரண்டாம் நாளாகப் போராட்டம்
இதனைத் தொடர்ந்து இன்று திடீரென கல்லூரிக்கு வெளியே, பேராசிரியரை உடனடியாக கைது செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இரண்டாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்ததால் கல்லூரியின் முதல்வர் சி.எம்.பி.டி காவல் துறையினருக்குப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பேராசிரியர் மீது பெண் வன்கொடுமை மற்றும் தகவல் தொழில்நுட்பச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பேராசிரியர் கைது
இதனையடுத்து அண்ணா நகர் துணை ஆணையர் தீபா கர்னிகர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, மாணவர்கள் கலைந்து சென்றனர். மேலும் உடனடியாகப் பேராசிரியரை செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பேராசிரியரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியரின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும் அவர்களின் தகவல் காக்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கோவை, சென்னையில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீண்டும் பாலியல் வழக்கில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ராம்குமார் மரணம்: மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை