இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், “புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.180 ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. 2016-2020 வரை 4 ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 லட்சமும், குறிப்பிட்ட சில அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது 1.7.2020 முதல் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு, கரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்தும் ஒப்பந்தத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் பெற்றுள்ளது.
ஆனால், இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும் பெற முடிவதில்லை. சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25%-50% வரை மட்டுமே வழங்குவது என்ற நடைமுறையை காப்பீட்டு நிறுவனம் கடைபிடித்து வருகிறது. இச்சூழலில் மீதிப் பணத்தை நோயாளிகளைக் கட்டச் சொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது, கரோனா நோய்க்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுப்பது போன்ற செயல்களில் மருத்துவமனை நிர்வாகங்களும் ஈடுபடுகின்றன.
இதனை காப்பீட்டு நிறுவனங்களிடமோ, கருவூலக் கணக்குத்துறையிடமோ கொண்டு சென்றால் தகுந்த பதில் தர மறுக்கின்றனர். அரசின் உன்னத திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத்திட்டப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ” எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலினைச் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்!