சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 12) முதல் தனியார் நிறுவன பாலின் விலை, ஆவின் விலையைக்காட்டிலும் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. தனியார் நிறுவன பாலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள் விற்கப்படுகின்றன. பால் பாக்கெட்டுகளின் நிறம் முறையே நீலம், பச்சை, ஆரஞ்சு முறையே லிட்டர் ஒன்றுக்கு ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் தற்போது விற்கப்படுகின்றன.
இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54-யில் இருந்து 56ஆக விற்பனை செய்து வருகிறது. இதே போல இரண்டாவது வகையான பால் ரூ.64இல் இருந்து 66ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது வகையான பால் ரூ. 70இல் இருந்து 72 வரை விற்கின்றன. ஆவினை விட தனியார் பால் விலை சுமார் 50 விழுக்காடு வரை அதிகம் ஆகும்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’தமிழ்நாட்டில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வு ஆகும். தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள் லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54 - 56, ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்கின்றன. எனவே, அதனை குறைக்க நடவடிக்கை வேண்டும்’ என்றார்.
தனியார் நிறுவன பால் உயர்வு குறித்து பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், "வழக்கமாக தனியார் பால் நிறுவனங்கள் ஏற்கெனவே சொன்ன காரணங்களை அதாவது மூலப்பொருள்கள் உயர்வினை சொல்லி விலையை உயர்த்தியுள்ளது. எனவே, அரசே பாலுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்", என கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7இல் பதவியேற்ற நிலையில், தனது முதல் கோப்பில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Exclusive Video: செங்கல்பட்டு அரசு மருத்துவரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - முதலமைச்சர் தலையிட வேண்டும்!