சேலம்: சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின், 74 ஆவது வருடாந்திர மகாசபை கூட்டம் சூரமங்கலம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் தலைவர் குமாரசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். சேலம் மாவட்டத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் குமாரசாமி கூறுகையில், "லாரி தொழிலை அங்கீகரிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் லாரி தொழிலாளர்களுக்கு என தனி நல வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அகற்றப்படவில்லை.
அவர் அறிவித்த அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். குறிப்பாக, சேலம் கருப்பூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
இதுவரை அந்த சுங்க சாவடியை அகற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களின் கோரிக்கைகளை உடனடியாக மத்திய மாநில அரசுகள் நிவர்த்தி செய்ய வேண்டும்.
எந்த ஒரு கோரிக்கை என்றாலும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று தான் தீர்வு காண வேண்டிய நிலை உள்ளது. அடுத்த மாதம் 10ஆம் தேதி மும்பையில் ஆல் இந்தியா மோட்டார்ஸ் காங்கிரசின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அந்த பொதுக்குழு கூட்டத்தில் சுங்கச்சாவடிகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி தேவைப்பட்டால் அதற்கான போராட்டத்தையும் அறிவிப்போம் என்று கூறினார்.
இதையும் படிங்க: உத்தரபிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள் - விசாரணை தீவிரம்