சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (50). இவரது குடும்பம் கடந்த மூன்று தலைமுறையாக பால் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக கிட்டத்தட்ட 15 பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு மாலையில் வீட்டுத் தொழுவத்தில் அடைப்பது வழக்கம்.
இதேபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தோட்டத்தில் இருந்த மாடுகளை கொண்டு வந்து வீட்டினுள் தண்ணீர் குடிப்பதற்காக அழைத்து வந்திருக்கிறார்.
அதில் "குதிரை" என்று செல்லமாக அழைக்கப்படும் ஐந்து வயது பசுமாடு தற்போது 9 மாத கருவுற்றுள்ளது. இந்த பசுமாடு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் குட்டியப்பன் தெருவில் உள்ள குப்பையை தின்று கொண்டிருந்தபோது, அதில் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து எடுக்கப்பட்ட மின்சார ஒயர்கள் குப்பை கூளங்களுக்குள் கிடந்துள்ளது.
இதனை அறியாமல் பசுமாடு குப்பை என நினைத்து கடித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த மின்சார தாக்குதலால் பசு மாட்டின் வயிற்றிலிருந்த 9 மாத கன்றுக்குட்டியும் பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக பசு மாட்டின் உரிமையாளர் ரகுநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமைச் செயலக காலனி காவலர்கள் விசாரணை நடத்தியதில் சனிக்கிழமை இரவு குட்டியப்பன் தெரு ஆட்டோ சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு இருக்கிறது.
அதற்கு தேவையான மின்சாரத்தை அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து கள்ளத்தனமாக எடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து குட்டியப்பன் தெரு ஆட்டோ தொழிலாளர் நலச் சங்க நிர்வாகியிடம் தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பசு வதையை தடுத்த இஸ்லாமிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!