சென்னை: கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வட்டார செயல்முறை கிடங்கு, ரேஷன் கடை ஆகியவற்றில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக நெல் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் 10 ரேஷன் கடைகளிலும், வருவாய் அலுவலர் 20 கடைகளிலும் என அனைத்து அதிகாரிகளும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொதுமக்களின் குறைகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமுதம் நிலையங்கள் உலக தரத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப்படும். மேலும், நெல் கொள்முதல் செய்வதற்கான கால தாமதம் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஜூன் 20ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்