சென்னை போரூர் ஏரியில் நெகிழிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் தேசிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தேசிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, போரூர் ஏரியில் கொட்டப்பட்டுள்ள நெகிழிக் கழிவுகளை அகற்ற அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது செய்தித்தாளில் வந்த புகைப்படமே சுட்டிக்காட்டியுள்ளது என்றனர்.
உள்ளாட்சி நிர்வாகம் அதைத் தடுக்காத காரணத்தால் போரூர் ஏரி, குப்பைகளைக் கொட்டி வைக்கும் இடமாக மாறிவிட்டது எனவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். நீர் நிலைகளில் இவ்வாறு நெகிழிக் கழிவுகள் தேங்கினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்பதால், கழிவுகளை அகற்ற வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு என்றும் அதைச் செய்யாமல் இந்த அமைப்புகள் தோல்வியடைந்து விட்டன என்றும் கூறினர்.
போரூர் ஏரியில் மேய்ச்சலில் உள்ள கால்நடைகள் கூட புற்களை உண்ண வழியின்றி நெகிழிப்பைகளை உண்டு பாதிப்புக்குள்ளாகிறது எனவும் இது இயற்கை உணவுச் சங்கிலியை உடைப்பதோடு, ஏரிக்குப் பேராபத்தான சூழலையும் உருவாக்கி வருவதாகவும் கூறிய நீதிபதிகள், அரசு இது தொடர்பாக குழு அமைத்து, போரூர் ஏரியில் கழிவுகளைக் கொட்டுபவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், ஏரியின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணி: தொடங்கிவைக்கும் முதலமைச்சர்!