பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படும் நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன. கரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்கள் பயணம் செய்வது மிகவும் குறைவாக இருந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்தது.
இதனிடையே, பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட இருக்கும் நிலையில், இன்று (ஜனவரி 13) சிறப்பு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,050 பேருந்துகளில் 1414 பேருந்துகளும், 496 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஜனவரி 11ஆம் தேதி முதல் இன்று மாலை 4 மணி வரை 7,670 பேருந்துகளில் மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 626 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பேருந்து நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் அனைவரும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் வந்தால் தானியங்கி இயந்திரம் மூலம் பணம் செலுத்தி முகக் கவசம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.