குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - 2019 இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தங்கி உள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும். இந்த சட்ட திருத்த மசோதாவில் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் இலங்கை தமிழர்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதுபற்றி நம்மிடையே விரிவாகப் பேசுகிறார் அரசியல் விமர்சகர் மார்க்ஸ்.
ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மார்க்ஸ் அளித்த சிறப்புப் பேட்டியில், ' 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள் அனைவருக்கும் உரிமை அளிக்கப்படும் என அறிவித்தனர். இது இஸ்ரேல் நாட்டின் கோட்பாடாகும். இஸ்ரேலில் வெளிநாட்டிலிருந்து வரும் யூதர்கள் யாவருக்கும் குடியுரிமை அளிக்கப்படும் என 'அலியா' கோட்பாடுபடி அறிவித்திருந்தார்கள். உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடக்கும் நாடு இஸ்ரேல். அங்குள்ள முஸ்லிம்கள் மீது கடுமையானத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் இஸ்ரேலுடன் இந்தியா உறவு வைத்துக்கொண்டதில்லை.
முதன்முதலாக நரேந்திர மோடி தான் இஸ்ரேல் சென்று ஏற்பட்ட உறவின் அடிப்படையில், அந்த நாட்டு கொள்கைக் கோட்பாடுகள் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படிதான் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதை அவர்கள் திட்டமிட்டு இந்தியா ஒரு இந்து நாடு என்பதை காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
வடகிழக்குப் பகுதிகளில் பக்கத்து நாடுகள், மாநிலங்களிலிருந்து யாரும் ஊடுருவ முடியாது. இதற்காக அங்கு மின்சார வேலிகள் போடப்பட்டு ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்படித்தான் மக்கள் ஊடுருவலை தவிர்க்க வேண்டுமே தவிர, மத அடிப்படையில் பிரித்து இந்துக்களுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து என்று கூற அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14இல் யாரையும், யாருக்கும் அடிப்படையில் பிரித்து சிறப்புச் சலுகைகள், கொடுமைகள் இழைக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் அந்தச் சட்டத்தை ஏற்காதவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடாச்சாரியார் தலைமையில் குழு அமைத்தவர்கள். உலகிலேயே தலைசிறந்த அரசியல் சட்டங்களில் ஒன்றாக இருக்கும் நமது அரசியல் சட்டத்தை குப்பையில், தூக்கி எறிந்து சட்டத்தை மறக்கச் செய்யும் கொள்கை உடையவர்கள் இவர்கள்.
மூன்று நாடுகளுக்கு குடியுரிமை அறிவித்து இந்தியாவோடு அதிக உறவு வைத்திருக்கும் இலங்கையிலிருந்து இங்கு வருபவர்களுக்கு குடியுரிமை கிடையாது என்று இருக்கிறார்கள். அதை நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு அகதிகள் கொள்கை இருக்கும். நமது அண்டை நாடான இலங்கையிலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். ஆனால், அவர்களுக்காக எந்த ஒரு அகதிகள் கொள்கையும் இங்கு இல்லை. திபெத்தில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இந்தியா தேவையான உதவிகளை செய்து வருகிறது. ஆனால், இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. கிட்டத்தட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு மட்டுமே செய்து வருகிறது.
அகதிகளுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசுதான் தனது செலவில் செய்து வருகிறது. ஆகவே, இந்திய அரசு, இலங்கையில் இருந்து வரும் தமிழ் மக்களை சம குடிமக்களாக கருதாத நிலையிலேயே உள்ளது. பாஜக ஆட்சியில் இது இன்னும் அதிகமாகியுள்ளது. மேலும் இன்று கொண்டுவரப்பட்ட குடிமக்கள் சட்டத் திருத்த மசோதா மூலம் இந்துக்களுக்கு தரும் பாதுகாப்பை போல, இலங்கையிலிருந்து வரும் தமிழர்களுக்கு அவர்கள் தர விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. தமிழர்களை இந்துக்கள் என்ற அடிப்படையில் கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்திய அரசானது மஹிந்த குடும்பத்திற்கும் சிங்கள அரசுக்கும் சாதகமாக செயல்பட்டு தமிழர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. எந்த காலத்திலும் தமிழர்கள் நலனை முன்வைத்து இலங்கை அரசு செயல்பட்டதில்லை என்பதன் தொடர்ச்சிதான் இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில், இலங்கை இணைக்கப்படாமல் இருப்பதற்கான காரணம். மேலும், இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆகவே, தங்களது கொள்கையில் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்று நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: