இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ நாடு முழுவதும் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுவர்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் போன்ற இடங்களில் அமைக்கப்படும் மையங்களில் ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதிவரை போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக ஆயிரம் நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைதவிர மேலும் 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஒருவாரத்துக்கு 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடதுகைசுண்டு விரலில் மை வைக்கப்படும்.
புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செவிலியர்கள் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவார்கள்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உருமாறிய கரோனா! - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!