சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த குறவர் இனத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் இன்று 'ஜெய்பீம்' படம் சார்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார்.
புகார் அளிக்க வந்த கொளஞ்சியப்பன் லுங்கி சட்டையுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்குப் புகார் அளிக்க வந்ததால் ஆணையரக அலுவலக வாசலில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இது குறித்து காவலர்களிடம் கொளஞ்சியப்பன் கேட்டபோது,
“எங்களுக்கென்று ஒரு விதிமுறை உள்ளது, அதன்படி லுங்கி கட்டிக்கொண்டு வரும் நபர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை” எனத் தெரிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கொளஞ்சியப்பன் செய்வதறியாமல் திகைத்து நின்றார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று என்ன நடந்தது எனக் கேட்டறிந்தனர்.
பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததால் உடனே செய்தியாளர்கள் அருகிலிருந்த கடைக்குச் சென்று வேட்டி ஒன்றை வாங்கி வந்து, கொளஞ்சியப்பனிடம் கொடுத்து, இதை கட்டிக்கொண்டு புகார் அளிக்க செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வேட்டிக்கட்டி சென்றதால் கொளஞ்சியப்பனை காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதி அளித்ததையடுத்து அவர் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி வேண்டி மனு அளித்துவிட்டு திரும்பிச்சென்றார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், ”காவல் ஆணையர் அலுவலகத்தின் விதிமுறையில் பல்வேறு சிக்கல்கள் நடைமுறையில் உள்ளது.
குறிப்பாக சாமானிய மக்கள் தாங்கள் உடுத்தும் உடையைத் தவிர வேறு வழியின்றி இருக்கும் பட்சத்தில் புகார் அளிக்க வரும் புகார்தாரர்கள் இவ்வாறு உடை அணிந்திருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த நடைமுறையை ஆணையர் எளிமையாக்கி சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும்”, எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: ஜெய்பீம் சர்ச்சை: சூர்யாவிற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கு ரத்து!