சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பூக்கடை, பேக்கரி, டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் அதிக அளவிலான குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக, தொழிலாளர் நலத்துறை சார்பாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் காவல் துறையினர் பூக்கடை, மண்ணடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி, டீக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பூக்கடை பந்தர் தெருவில் இயங்கி வரும் பாம்பே டீ ஸ்டாலில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை காவல் துறையினர் மீட்டனர்.
மேலும், மூர் தெருவில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்த இரண்டு வட மாநில சிறுவர்களும், அங்கப்பன் நாய்க்கர் தெருவில் ஹோட்டல் பிஸ்மியில் பணியாற்றி வந்த இரண்டு வட மாநில சிறுவர்களையும் காவல் துறையினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட ஐந்து சிறுவர்கள் ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த சம்பளத்தில் அங்கேயே தங்கி பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
இதனையடுத்து, சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய பேக்கரி, டீக்கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு ஒத்திவைப்பு