சென்னை: ஆதம்பாக்கம் கக்கன் நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்தவர் தகலாராம் சவுத்ரி (43). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் தன் பெயர் உமா என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர், பழைய நகைகளுக்கு் பதிலாக புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக கூறி தனது நகைகளைக் கொடுத்துவிட்டு, 7 சவரனுக்கு புதிய நகைகளை வாங்கிச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது நகைகள் அனைத்தும் போலியானது என சவுத்ரிக்குத் தெரியவந்தது. உடனே இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
சிசிடிவியில் சிக்கிய பெண்
இதேபோல், ஆதம்பாக்கம் கருணீக்கர் தெருவில் நகைக்கடை நடத்தி வரும் ஜதேந்தர் குமார் (51) என்பவரின் கடைக்கு வந்த பெண் ஒருவர் நகைகளைப் பார்த்துவிட்டு, எதையும் வாங்காமல் சென்றுவிட்டார். பின்னர்தான் கடையில் இருந்த ஒன்றரை சவரன் கம்மல் திருடு போனது கடைக்காரர்களுக்கு தெரியவந்தது.
இது குறித்தும் கடைக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருட்டு நடந்த இரண்டு கடைகளில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், போலி நகை கொடுத்து தங்க நகை வாங்கிச் சென்றதும், நகையை திருடிச் சென்றதும் ஒரே நபர் என்பது தெரியவந்தது.
சுற்றிவளைத்த காவல் துறை
இதையடுத்து நகைக்கடை உரிமையாளர்கள் சக நகைக் கடை உரிமையாளர்களுக்கு இந்த மோசடி பெண் குறித்த புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உஷார்படுத்தினர். இதனை அறியாத மோசடி பெண், வழக்கம்போல ஆயில்மில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள நகைக்கடைக்கு சென்றுள்ளார்.
இந்தப் பெண்ணை பார்த்த கடை உரிமையாளர், உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆதம்பாக்கம் காவல் துறையினர், மோசடி பெண்ணையும் அவருடன் இருந்தவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
காவல் துறை விசாரணை
விசாரணையில் அவர்கள் சேலம் தாதக்காப்பட்டியைச் சேர்ந்த ராதா (35) என்பதும், அவரது உறவினரான சேலம் கொண்டாரம்பட்டியைச் சேர்ந்த கவுரிசங்கர் (33) என்பதும் தெரியவந்தது. இவர்கள் திண்டுக்கல், சென்னை மாம்பலம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல நகைக்கடைகளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து மோசடி செய்வதற்காக வைத்திருந்த போலி நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வழிப்பறி செய்த நபர்களை விரட்டி பிடித்த மெக்கானிக் - கொரட்டூரில் பரப்பரப்பு