சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு, ’இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகங்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகிறது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் இது குற்றமாகும். எனவே, தமிழ்நாட்டில் ஒட்டகம் வெட்ட தடை விதிக்க வேண்டும் " என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவை பிறப்பித்தது. அதில், “விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் ஒட்டகங்களை வெட்டுவதற்கென தனியாக அறுவைக்கூடங்கள் இல்லை. ஆடுகளை வெட்டுவது போல ஒட்டகங்களுக்கும் பிரத்யேக அறுவைக்கூடங்கள் இருந்தால் மட்டுமே அதை அனுமதிக்க முடியும். அதுபோன்ற பிரத்யேக அறுவைக்கூட வசதிகள் இல்லை என்பதால் ஒட்டகங்களை வெட்டுவதை அனுமதிக்க முடியாது” என உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி, சட்ட விரோதமாக வாகனங்களில் ஒட்டகம் கொண்டு வரப்படுகிறதா? தடையை மீறி வெட்டப்படுகிறதா? எனக் கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னை காவல் எல்லைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையை உலுக்கிய பண மோசடி சம்பவம்: எம்எல்எம் நிறுவனர் கைது!