இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ. மற்றும் எம்.டெக் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். துணைவேந்தர் சூரப்பா ஆணைப்படி வெளியிடப்பட்டுள்ள, வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொறியியல், அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகளான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் ஆகியவற்றில் சேருவதற்காக தமிழ்நாடு பொதுநுழைவுத்தேர்வு(டான்செட்) என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கான அறிவிக்கை எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்த்திருந்த பொறியியல் உள்ளிட்ட பட்டதாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் அளித்திருக்கிறது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அண்மையில் நீக்கப்பட்டார். அதை அவரது ஈகோவால் தாங்கிக் கொள்ள முடியாததால் பொறியியல் கலந்தாய்வு குழுவிலிருந்து விலகி, அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்த முடியாத நிலையை உருவாக்கினார்.
அதன்தொடர்ச்சியாகவே, முதுநிலை தொழில்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை அண்ணா பல்கலை. தனியாக நடத்தும் என்று சூரப்பா அறிவித்திருக்கிறார்.
சூரப்பாவின் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரமும் சீரழிந்து வருகிறது. தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் கடந்த ஆண்டு 4-ஆவது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் நடப்பாண்டில் 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் இருந்து 9-ஆவது இடத்திற்கும், ஒட்டுமொத்த தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருந்து 14-ஆவது இடத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகம் சரிந்திருக்கிறது. பல்கலையை முன்னேற்றுவதற்கு பதிலாக சீரழிப்பதையும், அரசுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு மாணவர்கள் நலனை சீர்குலைப்பதையும் அரசும், ஆளுநரும் சகித்துக் கொள்ளக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து சூரப்பாவை நீக்கி விட்டு, சிறந்த கல்வியாளர் ஒருவரை அப்பதவியில் ஆளுநர் அமர்த்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.