வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, இரண்டாம் நாளாக இன்று வள்ளுவர் கோட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் பங்கேற்ற பாமகவினர் இட ஒதுக்கீடு கோரும் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, " கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரியும், தமிழ்நாடு அரசுப்பணிகளில் வன்னியர்களுக்கு எத்தனை இடம் கிடைத்தது என்று கூற வலியுறுத்தியும், 2 ஆவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இது அடிப்படை உரிமை கேட்கும் போராட்டம்.
அருந்ததிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் ராமதாஸ். இஸ்லாமிய சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேறக் காரணம் பாமக. பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு கல்வியிலும் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது ராமதாஸ்.
தமிழகத்தில் மிகப்பெரிய சமூகமான வன்னியர்கள், கூலி வேலை செய்ய நாடு முழுவதும் அலைந்து திரிகிறார்கள். இந்த சமூகம் வளர்ச்சி பெற்றால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும். 20% ஒதுக்கீடு 109 சாதிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் 5% தான் வன்னியர்களுக்கு கிடைக்கிறது. இதனால் தான் வன்னியர்களுக்கு என 20% இட ஒதுக்கீடு வழங்க கேட்கிறோம். அரசு ஆணையம், கமிட்டி அமைத்து காலம் தாழ்த்தக்கூடாது. உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் “ என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணியிடம், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்காவிட்டால், கூட்டணியில் இருந்து பாமக விலகுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது அரசியல் பிரச்சனை, தேர்தல் பிரச்சனை இல்லை என்றார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக, வன்னியர் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பாமகவினர் சாலை மறியல், ரயிலை மறித்து கல்வீச்சு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 200 காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!