இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மின்சாரத் துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், 2003 ஆம் ஆண்டின் மின்சார சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. உழவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் இந்தத் திருத்தம் திரும்பப் பெற வேண்டியதாகும்.
மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள மின்சார சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், ஏழைகளும், உழவர்களும் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய மின்சார சட்டத்தின் 45 ஆவது பிரிவு மின்கட்டணத்தை வசூலிக்கும் அதிகாரத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குகிறது. இச்சட்டத்தின் 65 ஆவது பிரிவு மின் கட்டணத்திற்கு மாநில அரசுகள் மானியம் வழங்குவதை முறைப்படுத்துகிறது. இந்த இரு பிரிவுகளிலும் செய்யப்படவுள்ள திருத்தங்களின் மூலம், மாநில அரசுகள் மின்சாரத்திற்கான மானியத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குவது தடை செய்யப்படும். மாறாக, பயனாளிகளுக்கு மாநில அரசு விரும்பினால் நேரடியாக மானியம் வழங்க வகை செய்யப்படும்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி எரிசக்தித் துறை பொதுப்பட்டியலில் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக பறித்துக் கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.
அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, மின்சார சட்டத் திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு துடிப்பதன் நோக்கம் புரியவில்லை. பொருளாதார பின்னடைவு, கரோனா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகியுள்ள நிலையில், இச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இலவச மின்சாரம் ரத்து, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட கூடுதல் சுமைகளை திணிக்கக்கூடாது. எனவே, மின்சார சட்டத்தை திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மின்சார சட்டத்திருத்தங்கள் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்