அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோரிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அதில் கூறியதாவது;
சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் எந்த விதமான ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து சென்னை, திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் பெற்றோர் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. அவ்வாறு இருக்கும் போது அவர்களிடம் மாணவர் சேர்க்கைக்காக ரூ.6,000 வரை கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதாக சில பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், அதற்காக நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூல் செய்யப்படுவது தவறு. கரோனா பாதிப்பால் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோரிடம் கட்டணம் செலுத்தும்படி கூறி சிரமப்படுத்தக்கூடாது. அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோரிடம் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது.
பெற்றோரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கல்வித்தரத்தை மேம்படுத்தியும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்தும் அரசு பள்ளிகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.