சென்னை: அண்ணாநகர் அக்ஷயம் ஓட்டல் அருகில் விபத்து ஏற்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்து காவல் துறையினர் காயங்களுடன் இருந்த பிரசாந்த் (22) என்பவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வாகனம் ஓட்டி அஜீத் குமார் (28) என்பவர் மது போதையில் இருந்துள்ளார். இதனால் அவரைப் போக்குவரத்துக் காவல் துறையினர் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவிலிருந்து இறங்கி அஜித்குமார் தப்பி ஓடியுள்ளார்.
போக்குவரத்து காவல் துறையினர் அவரை விரட்டிச் சென்று பிடித்தபோது, காவலரின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு, தகாத சொற்களால் திட்டியுள்ளார். கீழே விழுந்ததில் அண்ணாநகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மனோகரனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து போக்குவரத்து காவல் துறையினர் அண்ணாநகர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அஜீத் குமாரை கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மேலும் அவர் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுதல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டா கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது!