புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம், விழுப்புரம், கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியன இணைந்து ‘மனித உரிமைகளும் மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளும்’ என்ற தலைப்பில் காணொலி கருத்தரங்கம் நடத்தியது. இதில் சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணதுரை, தலைமையுரையாற்றினார்.
தொடர்ந்து இதில் கலந்துகொண்டு பேசிய, நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், "மாற்றுப்பாலினத்தவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் சமுதாயத்தில் கண்ணியமாக வாழ்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசு, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்காகப் பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி, மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார், மதுரை மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஆதார வள மையம் பிரியாபாபு, புதுச்சேரி சகோதரன் அமைப்பின் தலைவர் டாக்டர் ஷீத்தல், கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜீஸ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாற்று பாலினத்தவர்களுக்கான பாதுகாப்பு, உரிமைகள், நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.