சென்னை: கரோனா தொற்று தாக்கியதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக இந்த காலத்தில் மட்டும் 30 கோடிக்கு மேல் ஆக்ஸிஜன் (பிராணவாயு) வாங்குவதற்கு செலவிடப்பட்டுள்ளது என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நுரையீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டு அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. மருத்துவர்கள் தொற்றுகான சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட சாதாரண அறிகுறிகள் இருந்தாலே மருத்துவமனைக்கு வருமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
ஆனாலும் பொதுமக்கள் சுய மருத்துவத்தினை சிலர் மேற்கொண்டு நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்த பின்னரே மருத்துவமனைக்கு வருகின்றனர். நோய்க் கிருமியானது நுரையீரலை தாக்கி அதில் அதிகளவு ஒவ்வாமை ஏற்படுத்திய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு உடனடியாக பிராணவாயு அளிக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு தேவையான பிராணவாயுவை சேமித்து வைக்க பெரிய அளவிலான சேமிப்பு கலன்களையும் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், பிராணவாயு சேமிப்பை அரசு படிப்படியாக உயர்த்தி வருவதாகவும், இங்கு செயற்கை பிராணவாயு கிடைக்காமல் ஒரு நோயாளி கூட இறக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேருபவர்களில் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 10 விழுக்காடு வரை குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகளவில் குறைந்துள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் சுமார் 40 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்பான தலைமையின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது. அதேபோல் பிராணவாயு சேகரித்து வைக்கும் கொள்கலனின் கொள்ளளவின் திறனையும் அதிகரித்துள்ளோம். மார்ச் மாதத்தில் 223 கிலோ லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கொள்கலன்கள் இருந்தன. சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிராணவாயு உருளையை, தற்போது 60 கிலோ லிட்டர் கொள்ளளவு திறன் கொண்டதாக மாற்றியுள்ளோம்.
அதேபோல் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிராணவாயு சேமித்து வைக்கும் கொள்கலன்களின் திறனை அதிகரித்துள்ளோம். தற்பொழுது 394 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கொள்கலன்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளன. இதனை 555 கிலோ லிட்டர் கொள்ளளவு திறன் கொண்டதாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் செயற்கை சுவாசக் கருவியில் பிராணவாயு செலுத்துவதற்கு தேவைப்படும் பி, டி வகை உருளைகள் 8000 கைவசம் இருக்கிறது.
மேலும், கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 2900 செயற்கை சுவாசக் கருவிகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. விரலில் வைத்து பிராணவாயு அளவை சோதனையிடும் (பிங்கர் பல்ஸ் ஆக்சி மீட்டர்) கருவி 64 ஆயிரம் இருப்பில் உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியை கண்காணிக்க பிராணவாயு, மாத்திரை போன்றவற்றை அளிப்பதற்கு தனித்தனியாக செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கழிவறைக்கு சென்று வரும்போது ஹைபாக்சியா ஏற்பட்டு சிலர் இறக்க நேரிடுகிறது. அதனை தடுப்பதற்காக கழிவறைக்குச் செல்வதற்கு முன்பும் பிராணவாயு வழங்குவதற்கு செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கை மூலமாக இறப்பு விகிதம் 32 விழுக்காட்டிற்கு மேல் சமீபத்தில் குறைந்துள்ளது. ஏற்கனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிராணவாயு, திரவ பிராணவாயு பயன்படுத்தப்பட்டது. தற்போது அதிகளவில் நோயாளிகளுக்கு பிராணவாயு அளிக்க வேண்டியுள்ளதால் திரவ வடிவிலேயே பயன்படுத்துவதற்கு கொள்கலனின் சேமிப்பு திறனை அதிகரித்துள்ளோம்.
ஏற்கனவே ஒரு நோயாளிக்கு சாதாரணமாக 5 முதல் 6 லிட்டர் பிராணவாயு அளித்து வந்தோம். தற்போது இது ஒருவருக்கு 60 லிட்டர் வரை அளிக்க வேண்டியுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிராணவாயு பயன்பாடும் அதிகரித்துள்ளது. பிராணவாயு கொள்முதலுக்கு கரோனா தாக்கத்தின் முன்பாக 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருந்தது. அதுவே போதுமானதாகவும் இருந்தது.
ஆனால் தற்போது நான்கு மாதத்திலேயே இதற்கான செலவு 30 கோடி ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது. பிராணவாயுவின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கனரக கொள்கல வாகனங்கள் மூலம் கொண்டு வந்து நிரப்புகிறோம்” என்பன போன்ற தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். மேலும், பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி நோய்க் கிருமித் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.