சென்னை: கரோனா தொற்று காரணமாக உயர்கல்வி மாணவர்களுக்கு ஆன்லைன்(online classes) மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன. தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் 50 விழுக்காடு எண்ணிக்கையுடன் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்துவந்த நிலையில், உயர் கல்வித் துறை வாரத்தில் 6 நாள்களும் நேரடியாக வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களும் நேரடியாக வகுப்புகள்(Offline classes) நடப்பட வேண்டும்.
இந்த வகுப்புகள் தமிழ்நாடு அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். நடப்பு பருவத்திற்கான தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு மேல் நேரடியாக நடத்தப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!